search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகளுக்குள் வெள்ளம்"

    கேரளாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் பலத்த மழை நீடித்து வருகிறது. மழைக்கு இதுவரை மாநிலம் முழுவதும் 20 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கோட்டயம், ஆலப்புழை மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

    ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துவிட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேங்கிய மழைநீர் வழிந்தோட வழியில்லாததால் பல வீடுகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. சில இடங்களில் தெருக்களில் நிறுத்தி இருந்த கார்களும் மூழ்கிவிட்டன.

    ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அரசு சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

    தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதார துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களை சேர்ந்த சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் வீடுகள் இன்றி தவித்து வருகிறார்கள். கோட்டயம் காலனி பகுதிகளில் வசித்து வரும் தமிழக சிறு வியாபாரிகள் குடும்பத்தினருக்கு தமிழர் நல்வாழ்வு சங்கம் சார்பில் அரிசி மற்றும் துணிமணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    பலத்த மழை மற்றும் சேதம் காரணமாக கோட்டயம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. ஆலப்புழை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாவட்டத்திலும் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    மாநிலம் முழுவதும் பரவலாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக இடுக்கி அணை உள்பட முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பும் தருவாயில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×